ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியில்லை!

Advertisements

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனிடையே, இத்தேர்தலில் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகத் த.வெ.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *