Edappadi Palaniswami:வேகமாகப் பரவும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் !

Advertisements

அதிகரித்து வரும் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ப்ளூ போன்ற விஷக்காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக, இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மழைக் காலங்களில் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் தற்போதே மக்களைத் தாக்கத் துவங்கி உள்ளதாகவும்; பல்வேறு மாவட்டங்களில் டெங்கு போன்ற விஷக்காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருவதாகவும், இதனால் பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்; போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும்; ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஒரே ஊசியைப் பல நோயாளிகளுக்குப் போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.

மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக்காய்ச்சல்கள் அதிகமாகப் பரவி உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல்; காய்ச்சல் முகாம்கள் நடத்துதல்; தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *