
Dushara Vijayan Quits Cinema : நடிகை துஷாரா விஜயன் ராயன் பட விழாவின் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, சினிமாவை விட்டு விலகுவது குறித்து பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் துஷாரா விஜயன். பிற மாநிலங்களிலிருந்து கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் மத்தியில், திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் துஷாரா.

சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்ததால், சென்னை வந்து தீவிர பட வேட்டையில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இவரைப் பார்த்துப் பலர், நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லையெனக் கூறிய நிலையில், மனதை தளர விடாமல் வாய்ப்பு தேட துவங்கினார்.
இதன் பலனாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘போதை ஏறிப் புத்தி மாறி’ என்ற படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அதிகம் பேசப்பட்டது.
இப்படத்திற்கு பின்னர் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய துஷாரா, காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’, அருள்நிதி ஜோடியாக ‘கழுவேத்தி மூர்க்கன்’, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

அதே போல் துஷாரா விஜயனின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. தற்போது துஷாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதே போல் தனுஷின் தங்கையாக ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரமுக்கு ஜோடியாக ‘வீர தீரச் சூரன்’ படத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த ஆண்டு இவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தனுஷின் ராயன் பட விழாவில் கலந்து கொண்ட துஷாரா, இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பு அவர் வேலை வாங்கிய விதம்பற்றிப் புகழ்ந்து தள்ளினார். அதே போல் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றியும் பேசினார்.
விழா முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா, சினிமாவில் தன்னுடைய ரிட்டயர்மெண்ட் எப்போது எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். தனக்கு 35 வது வயது ஆன பின்னர் முழுமையாகத் திரையுலகிலிருந்து விலகி விடுவேன் எனத் துஷாரா கூறியுள்ளார். 35 வயதுக்கு பின்னர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என்பது போல் துஷாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது துஷாராவுக்கு 26 வயதே ஆகும் நிலையில், இன்னும் 9 வருடங்கள் மட்டுமே நடிப்பார் என்பது தெரிகிறது.

