DMK: ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

Advertisements

DMK | O. Panneerselvam | Kachchatheevu

கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 1974-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி. கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வைப்பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியைத் தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *