
கடலூரில் மனைப்பட்டாவில் பெயர் மாற்றம் செய்து வழங்கிய அதிகாரிகளைக் கண்டித்தும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வடக்கு சாத்திப்பட்டு பகுதியைச் சார்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் தனக்கு சொந்தமாக 5 சென்ட் நிலமுள்ள நிலையில், அதில் பாதி அளவிற்கு மனை பட்டா அதிகாரிகள் வழங்கியதாகவும், மீதமுள்ள நிலத்திற்கு மனைபட்டா வழங்காமல் வேறு ஒருவருக்கு மனை பட்டாவை வழங்கியதாகப் புகார் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி தனது 2 மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மனைப்பட்டா வழங்காததால் தனக்கும் தன்னுடன் வசிக்கவும், மாடுகளைக் கட்டுவதற்கான இடமும் இல்லை எனவும் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்பொழுது சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை அழைத்து அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.


