
தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் மூன்றாம் நாள் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெறிநாய்க் கடியால் உயிரிழப்பு ஏற்படுகிறது, இதேபோல் சிறார்கள் பலர் தெருநாய்களால் துரத்திக் கடிக்கப்படும் நிலையும் உள்ளது.
இது குறித்த வழக்கில் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், இது குறித்து அறிக்கை அளிக்கவும் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், ஒன்றிய ஆட்சிப்பகுதிகளின் நிர்வாகிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியின் மாநகராட்சிகள், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து மட்டும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்பதற்கான விளக்கத்துடன் நவம்பர் மூன்றாம் நாள் முற்பகல் பத்தரை மணிக்கு நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


