கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோவை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள் 58 பேரின் உயிர்களைப் பறித்து, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி, முகமது அலி, மொனப்பா, முகமது அஜம் மற்றும் நவாப் கான் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு, தவெக அரசு 60 நாட்கள் நீண்டகால பரோல் வழங்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தைக் காரணம் காட்டி இத்தகைய பயங்கரவாதக் குற்றவாளிகளுக்கு நீண்டகால பரோல்களும் தாராளமாக வழங்கப்படுமானால், பாதிக்கப்பட்டவர்களின் 58 அப்பாவி குடும்பங்களுக்கு என்ன நீதி? என்று வினவியுள்ளார்.இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திய இத்தகைய குற்றவாளிகளை இரண்டு மாதங்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிப்பது, சமூக அமைதிக்கு விடுக்கப்படும் மாபெரும் அச்சுறுத்தல் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 60 நாட்கள் பரோலை தவெக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்…


