பெற்றோர் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.!

Advertisements

சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைவாக மாணவர்கள் மதிப்பெண் பெற்றால் ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மார்ச் 18 ஆம் தேதி அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

சிறு குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறைக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “தேசிய கல்விக் கொள்கையின் படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் 5, 8 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் மீண்டும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும் என்கிற சரத்தை அமல்படுத்தப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காகத்தான் தொடர்ந்து நாம் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

இன்று தமிழகத்தில் தொடக்க கல்வியில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக நாம் திகழ்ந்து வருகிறோம். 5 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளை, பெற்றோரிடம் அழுத்தம் கொடுக்கும் செயல் இது. 5 ஆவது படிக்கும் பிள்ளையிடம் என்னவென்று சொல்லி அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10 ஆம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், சிபிஎஸ்இ படிக்கும் பிள்ளைகள், பெற்றோருக்கு தனி சட்டம் அமல்படுத்தப்படும்போது இடைநிற்றல் அதிகமாகும். இதனை பெற்றோர்கள் எதிர்த்து கேள்விகள் கேட்க வேண்டும்.

கட்சிக்காகவோ, இயக்கத்திற்காகவோ இதனை கேட்கவில்லை. நாட்டின் எதிர்காலத்துக்காக இதனை எதிர்க்க வேண்டும். சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால்தான் தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் கோரினால் அதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.” என்றார்.
என்று கூறினார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *