
திருவனந்தபுரம்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மீக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி திரும்பப் பெறுவோம். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். இந்திய குடியுரிமைக்குள், நமது தேசிய வாழ்க்கைக்குள் மதத்தைப் புகுத்துவதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், அண்டை நாடுகளிலிருந்து தஞ்சம் அடைந்தவர்களுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்கப்படுவது மிகவும் நல்ல கொள்கை. துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவர்களுக்கு அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குப் புகலிடம் கொடுப்பதாகச் சட்டம் இருந்திருந்தால் நாங்கள் அதனை வரவேற்போம். ஆனால், ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.
இதற்கு என்ன அர்த்தம்? பாகிஸ்தானை நிராகரித்துவிட்டு, இந்தியாவுக்கு வந்தவர்கள்; இந்திய குடியுரிமை பெற விரும்புபவர்கள் முஸ்லிமாக இருந்தால் அவர்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை தர மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.



