
பெருமளவிலான இயற்கை வளங்களைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்துக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றுள்ளார். தலைநகர் காபரோனில் அந்நாட்டு அதிபர் கிதியோன் போக்கோ அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
அதன்பின் காபரோனில் உள்ள அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, விடுதலைக்குப் பின் போட்ஸ்வானா தலைவர்களும் மக்களும் அமைதி, நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்கிற குறிக்கோளுடன் கடுமையாகப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
போட்ஸ்வானாவில் கல்வி, நலவாழ்வு, தொழில்நுட்பம், வேளாண்மை, பாதுகாப்பு, வணிகம் ஆகிய துறைகளில் முதலீடு செய்து அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதில் இந்தியா பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டார்.
நல்ல எதிர்காலத்தின் கண்டமாகத் திகழும் ஆப்பிரிக்கா பெருமளவு இயற்கை வளங்களைக் கொண்டிருப்பதால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கும் எனத் தெரிவித்தார்.





