
சேலம் மத்திய சிறையில் பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை ஒளித்து வைத்து கொண்டு வந்த ஒரு பார்வையாளரை போலீஸார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கவியரசு. இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் சிறைக்கு வந்திருந்தார்.
அது போல் சிறை கைதிகளை பார்க்க வருவோர் கொடுக்கும் உணவு பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அந்த பொருட்களை சம்பந்தப்பட்ட கைதிகளிடம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் கவியரசுவிற்காக முகமது சுகில் பிஸ்கெட் கொண்டு வந்திருந்தார். அதை போலீஸார் சோதனையிட்ட போது அந்த பிரபல பிஸ்கெட் பாக்கெட்டின் சைஸும் தோற்றமும் வேறு மாதிரி இருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது வட்டமான பிஸ்கெட்டின் நடு பகுதி உடைக்கப்பட்டு வெறும் வளையங்கள் மட்டுமே இருந்தது. அதில் கஞ்சாக்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து 80 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து முகமது சுகிலை அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கஞ்சாவை தவிர வேறு ஏதேனும் பொருள் உள்ளே கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறைக்குள்ளேயே தைரியமாக பிஸ்கெட்டில் மறைத்துவைத்து கஞ்சாவை கொண்டு சென்ற நபர் குறித்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவியரசுவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



