Annamalai: ‘நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?’

Advertisements

சென்னை: ‘நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?’ எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை காங்., ஆட்சியில் தாக்கலான பட்ஜெட்டில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும் மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?.

ஏழை, எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகுசிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழகம் என்ற பெயர் இடம் பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.

அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?. திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?. மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர்?

முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *