
சென்னை:
தமிழக பா.ஜ.க, தலைவராக மீண்டும் அண்ணாமலை பதவியேற்கிறாரெனப் பா.ஜ.க, வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்த அவருக்கு, தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது.
தன் பதவிக்காலத்தில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், கட்சிப் பணியாற்றினார். தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
இவரது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.
மாநில பா.ஜ.க, தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் எனப் பா.ஜ.க, வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலையை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப் பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாகக் கடந்த டிச., 2ம் தேதி சென்னையில் நடந்த பா.ஜ.க, ஆலோசனை கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மீண்டும் அண்ணாமலையை மாநில தலைவராகத் தேர்வு செய்யப் பூர்வாங்கமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை தன் பதவிக்காலத்தில், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் பணி ஆற்றியுள்ளதாகத் தேசிய தலைமை கருதுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் அவர் மேற்கொண்ட, ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை, மாநிலம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தது. இதன் பயனாக, லோக்சபா தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ.க, கட்சிக்குக் கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன.
இதனால், அண்ணாமலை மீதான தேசிய தலைமையின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இந்தப் பின்னணியில் தான் அண்ணாமலையை இரண்டாவது முறையாக மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யும் ஏற்பாடு நடக்கிறது என்றும், போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம் என்றும் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.


