
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் பாதிப்புகளால் மக்கள் வெகுவாக சிரமத்திற்குள்ளாகிய பகுதிகளை நெல்லையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
உதவிகள் வழங்கிய அன்புமணி ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை வேகமாக சரி செய்ய வேண்டும். அரசின் தற்போதைய வேலையில் வேகம் வேண்டும். தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு வந்து மேற்பார்வையிட்டு மீட்பு பணியை துரித்தப்படுத்த வேண்டும் . மேலும் வெள்ளம் பாதித்து 6 நாட்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை கிடைக்கவில்லை.
நெல்லை நகரப் பகுதிக்குள் இந்த நிலைமை என்றால் கிராமங்களில் மக்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அரசு அறிவித்துள்ள ரூ.6000 நிவாரணம் போதாது. இதனால் 3 கட்டங்களாக சேர்த்து மொத்தம் ரூ.25,000 பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு கால்நடைகள் இறந்துள்ளது என்ற கணக்கே இல்லை.
தாமிரபரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்தது விட்டதே இதற்கு காரணம். முதலில் 30 ஆயிரம் கன அடியாக அறிவித்து பின்னர் 50,000 கன அடி என்று கூறப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது. நிலைமை மோசமான பின்னரும் கூட ஒரு லட்சம் கன அடி திறந்து உள்ளதாக தெரிவித்தாலும் அதனை விட கூடுதலாகவே தண்ணீர் திறந்தனர்.
ஏற்கனவே ஆற்று படுகைகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவும் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் நகரத்துக்குள் வந்து விட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்டவைகள் பாதிப்படைந்துள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.கால் நடைகள் கூட சேதம் அடைந்து உயிரிழந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளது. தூத்துக்குடியில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலை ஏற்படுவதற்கு முன்னரே அரசு துரிதகதியில் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனநிலையும் மாற வேண்டும் ஒவ்வொரு முறையும் மழை வரும் போது இந்த நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்து அதற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயரவேண்டும்.
மக்களுக்கு இலவச பொருள்களை அரசு கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது. இது மாபெரும் தவறு. புதிதாக ஏரிகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெள்ள காலத்தில் கடலுக்கு நீர் செல்வதை தடுத்து ஏரிகள், குளங்களில் நிரப்பலாம்.
ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளை போன்று மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். அடுத்த வெள்ளம் வருவதற்குள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாறுகால்கள் அமைக்க வேண்டும் தாமிரபரணியை காக்க நான் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது பார்த்தேன். பாபநாசத்தில் ஆரம்பித்து புன்னக்காயல் வரையிலும் ஆற்றை கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக ஆளுநரும் நேரில் வந்து பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கு பாதிப்பின் தன்மை குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக அரசு தற்போது நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டுள்ளது. அதனை மத்திய அரசு கொடுப்பதில் தவறில்லை. இந்த நேரத்தில் கொடுக்காமல் வேறு எந்த நேரத்தில் மத்திய அரசு கொடுக்கப் போகிறது. இது போன்ற காலகட்டம் அரசுக்கும் மிகப்பெரிய சவால் தான். எனினும் மீட்பு பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

