
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் செய்தியாளர்களை அனுமதிக்காதது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இந்தச் சந்திப்பை ஆண் செய்தியாளர்கள் புறக்கணித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவுலவி அமீர்கான் முத்தக்கி, தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை, மின்சாரம், சுரங்கம் ஆகிய துறைகளில் பணியாற்ற வரும்படி இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காபூலில் உள்ள இந்திய அரசின் தொழில்நுட்ப அலுவலகம் இனித் தூதரகமாகத் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அமீர்கான் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பெண் செய்தியாளர்களைப் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இது குறித்துக் கருத்துக் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண்களை அனுமதிக்காதது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் சந்திப்பை ஆண் செய்தியாளர்கள் புறக்கணித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் செய்தியாளர்களைப் பங்கேற்க அனுமதிக்காதது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கன் தூதரகத்தின் இந்தப் பாகுபாடான செயலுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆப்கன் தூதரகத்தில் நடந்த அந்நாட்டு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் தங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
