
“அதிமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஈபிஎஸ் மகன், மாப்பிள்ளை குடும்பத்தினர்தான் அதிமுகவை நடத்துகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரனோடு இணைந்து செயல்பட்டதாக செங்கோட்டையன் அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுக மீண்டும் வெற்றிபெற வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றேன். அதற்கு பிறகு கழக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன்.
யார் என்னிடம் பேசினாலும் நடவடிக்கை எடுக்கும் நிலை இன்று உள்ளது. நிர்வாகிகள் நீக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்” என்றார்.எந்த சம்பவத்திற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கு பற்றி சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்?” என கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், “கொடநாடு விவகாரத்தை வைத்து யார் திமுகவின் பி டீம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓபிஎஸ்-ஐ மட்டும்தான் முதலமைச்சராக ஜெயலலிதா அமர்த்தினார். நாங்கள் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகி இருக்க முடியாது. அம்மா மூலம் 3 முறை முதல்வர் ஆனவர் ஓபிஎஸ். ஆனால் கொல்லைப்புறமாக முதல்வர் பதவிக்கு வந்தவர் இபிஎஸ்” என்று அவர் தெரிவித்தார். “எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்தவில்லை. மகன், மாப்பிள்ளை, மருமகன், அக்கா மகன் ஆகியோர்தான் அதிமுகவை நடத்துகின்றனர்.
அப்படி என்றால் இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், உயிராக நேசித்தவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலை உள்ளது. மேலும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தவும் 2029 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்ய மேல இருக்கக்கூடிய உயர்மட்ட நபருடன் பேசி பூர்த்தி செய்யலாம் என்று கூறினேன்” என்றும் அவர் தெரிவித்தார்.



