Advertisements

அதிமுக கூட்டணியில் இணைக்க சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளது என கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக புதிய கட்சிகளை தங்களது அணியில் இணைத்து வருகிறது.
ஏற்கனவே பாஜகவை இணைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பாமகவில் அன்புமணி அணியையும் சேர்த்துள்ளது. இதனையடுத்து மேலும் புதிய கட்சிகளை இணைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மூன்றாவது நாளாக எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
காலை விருதுநகர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமும், மாலை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் பல்வேறு கேள்விகளை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்.
கட்சிக்காக கலந்து கொண்ட போராட்டம், தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவு விவரங்களையும் கேட்டார். இதனை தொடர்ந்து விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளதாகவும், அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும் எனவும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தவர், அதிமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. தற்போது டிடிவி தினகரனின் அமமுகவிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல தேமுதிகவிடம் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே ஏற்கனவே அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் தேமுதிகவிற்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
Advertisements




