
அதானி நிறுவனம் கொள்ளையடித்து வருவதாகக் குற்றசாட்டு!
புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை அதிகரித்து விட்டதால், அதற்கான பணத்தை பொது மக்களிடமிருந்து அதானி நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது எனக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் கூறியதாவது: இந்தோனேஷியாவில் அதானி நிறுவனம் நிலக்கரி வாங்கியது. அது இந்தியா வருவதற்குள் விலை இரு மடங்காகிவிட்டது. அதற்காக அவர் ஏழை மக்களிடமிருந்து பணம் வசூலிக்கிறார். இது நேரடி திருட்டு ஆகும். மக்களின் பைகளிலிருந்து ரூ.12 ஆயிரம் கோடி பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அதானியை அரசு பாதுகாக்கிறது. அவருக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதானி, நிலக்கரி இறக்குமதி செய்ததில், ஏற்பட்ட பணவீக்கத்தால், சாமானிய மக்களின் மின்சாரச் செலவு அதிகரித்து வருகிறது. அதானி நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த அரசு எடுக்கத் தயங்குவதேன் ?
பிரதமர் மவுனமாக இருப்பதினால் தான் அவரிடம் கேள்வி எழுப்புகிறேன். நான் பிரதமருக்கு உதவி மட்டும் செய்கிறேன். விசாரணையைத் தொடங்கி, அவரது நம்பகத்தன்மையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொது மக்களின் பைகளிலிருந்து பணம் திருடப்படுகிறது. மின்சாரத்திற்காகச் சுவிட்ச் பட்டனை அழுத்தும்போது எல்லாம் அதானி பைகளில் பணம் சென்று சேர்கிறது. மற்ற நாடுகளில் விசாரணை நடக்கிறது. மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.


