
விஜயவாடா: சனாதனம் குறித்து பேசிய உதயநிதியின் கன்னத்தில் காலணியால் அறைந்தால் ரூ.10 லட்சம் பரிசு தரப்படும் என ஆந்திராவை சேர்ந்த இந்துத்துவா அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன தர்மத்தை கொசு, கொரோனாவை ஒழிப்பது போன்று ஒழிக்க வேண்டும் எனப் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் அயோதியை சேர்ந்த பரம சாது சாமியார் பரம ஹன்ஸ் ஆச்சாரியா, சனாதனம் பற்றி இழிவாகப் பேசிய உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாகவும் அறிவித்தார். இது பரபரப்பை கிளப்பியது.
தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடைச் சேர்ந்த “ஜன ஜாகரனா சமிதி” என்ற இந்துத்துவா அமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சனாதனத்தை ஒழிப்போம் எனப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி கன்னத்தில் காலணியால் அறைந்தால் ரூ.10 லட்சம் பரிசு தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அறைவது போன்ற படத்தையும் போட்டு விஜயவாடா தெருக்களில் அந்த அமைப்பு போஸ்டர்களையும் ஒட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


