வரும் 29-ந்தேதி ஒரு நாள் கடையடைப்பு!

Advertisements

ஈரோடு:

மத்திய அரசுக் கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் அமலாக்கி உள்ளது. இந்த முறையால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வரி விதிப்பு முறையை முழுமையாக நீக்கம் செய்யக்கோரி வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு நடத்த அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பினை கண்டித்து வருகிற 29-ந்தேதி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியது, அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி என்பது வணிகர்களைக் கடுமையாகப் பாதிக்கும். ரூ.10 ஆயிரம் வாடகையில் கடை நடத்தும் வியாபாரி ரூ.1,800 செலுத்த வேண்டி வரும். பெரிய வியாபாரிகள், வணிகர்கள், ஜிஎஸ்டி.யை ‘இன்புட்’ என்ற ரீதியில் திரும்பப் பெற இயலும்.

குறைந்த வர்த்தகத்தில் தொழில் செய்யும், ‘கன்சல்டேட்டேட்’ முறையில் ஜி.எஸ்.டி.யாக, 1 சதவீதம் செலுத்தும் வணிகர்கள், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகையைத் திரும்பப் பெற இயலாது. தவிர மிக மிகக் குறைந்த அளவிலும், பில் இன்றி பரிமாற்றம் செய்யப்படும் வணிகத்தில் உள்ளோரும் கடுமையாகப் பாதிப்பார்கள்.

எனவே 18 சதவீத ஜி.எஸ்.டி.யை வணிகர்களுக்கு முழுமையாக நீக்கக் கோரி வருகிற 29-ந் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும் நடத்துகிறது. ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு ஈரோடு நகை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சங்கத்தினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *