வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு விழா தில்லியில் கொண்டாட்டம்..!

Advertisements

வந்தே மாதரம் பாடல் விடுதலையின் மந்திரமாகவும், கனவாகவும், தீர்மானமாகவும், ஆற்றலாகவும் விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வங்காளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் புதினத்தில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றுள்ளது. வங்கப் பிரிவினையின்போதும் சுதேசி இயக்கத்தின் எழுச்சியின்போதும் இந்தப் பாடல் விடுதலைப் போராட்டத்துக்கு எழுச்சியூட்டியது.

விடுதலைக்குப் பின்னர் தேசியப் பாடலாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு விழாக்களில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அரசின் வானொலியும் தொலைக்காட்சியும் ஒவ்வொருநாள் காலையிலும் வந்தே மாதரம் பாடலுடனேயே தங்கள் ஒலிபரப்பைத் தொடங்குகின்றன. இந்தப் பாடலை எழுதி 150 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று முதல் அடுத்த ஆண்டு நவம்பர் ஏழு வரை ஓராண்டுக் கொண்டாட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.

அதற்கான தொடக்க விழா தில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வந்தே மாதரம் பாடல் குறித்த வரலாற்று ஆவணத் தொகுப்புகளைப் பார்வையிட்டனர். ஆனந்தமடல் புதினப் புத்தகங்கள், வந்தே மாதரம் பாடல் அடங்கிய இசைத் தட்டுக்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

150 ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்வாக வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று தாய்நாட்டுக்கு வணக்கம் செலுத்தினர்.வந்தே மாதரம் பாட்டின் 150 ஆண்டு விழாவையொட்டி 150 ரூபாய் நாணயத்தையும், சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

VandeMataram150.in என்கிற வலைத்தளத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார். உருவம் பலவானாலும் நம் குரல் ஒன்றன்றோ எனப் பொருள்படும் பாடலைக் கருநாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சேர்ந்திசைப் பாடலாகப் பாடினர். அதைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு மகிழ்ந்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் விடுதலையின் முன்னறிவிப்பாக வந்தே மாதரம் பாடல் விளங்கியதாகவும், நாட்டின் அடிமைச்சங்கிலி இந்தியத் தாயால் உடைத்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இப்போது இந்தியத் தாயின் பிள்ளைகள் அவர்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் வெறும் புதினம் மட்டுமில்லை என்றும், அது நாட்டின் விடுதலைக்கான கனவு என்று இரவீந்திரநாத் தாகூர் கூறியதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். பங்கிம் சந்திரரின் சொற்கள் மிகவும் ஆழமானவை என்றும், நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் இயற்றப்பட்ட இந்தப் பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் இந்தியா கால்பங்கைக் கொண்டிருந்ததாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடல் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டார். நாடே தாய் என்றும், நாமெல்லாம் அவள் பிள்ளைகள் என்றும் நமது வேதங்கள் போதிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *