
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் பணி நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் இப்போதுள்ள நால்வழிச்சாலை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுவழிச்சாலையாக மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருவாடானை, ராஜசிங்க மங்கலம் வட்டங்களில் 16 கண்மாய்கள் 18 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும் என்றும், பரமக்குடி நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கச்சத்தீவை மீட்பதே அதற்கான ஒரே தீர்வாகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்கக் கோரிச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தும், மத்திய அரசு அது தொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கச்சத்தீவைத் திருப்பித் தரமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்றும் ஸ்டாலின் வினவினார். இயற்கைப் பேரிடர் மீட்பு மறுவாழ்வுக்காகத் தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்றும், சரக்கு சேவை வரிப் பகிர்விலும் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
