
நாட்டின் ஒடுத்த மொத்த மக்களும் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான அவர்களது கோபத்தை மக்களவை தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படுத்த வேணடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அதற்கான விதிகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, விண்ணப்பிப்பதற்கான இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது.
சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள், 3 மாதம் ஆகிய நிலையில் தற்போது அமல்படுத்துவதேன்? என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தலுக்காக இதைக் கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளன.
இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலிருந்து, அந்த நாடுகளில் சிறுபான்மையினராகக் கருதப்படும் நபர்கள் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். இங்கு வந்து குடியேறிவர்களுக்கு வீடுகள் வழங்கவும், வேலைவாய்ப்புக்காகவும் நம்முடைய மக்கள் பணத்தை செலவழிக்க பா.ஜனதா விரும்புகிறது.
வரும் தேர்தலில் இந்த மூன்று நாடுகளிலிருந்து இந்தியா வந்து குடியேறிவர்கள், வாக்கு வங்கியாக மாறுவதால் பா.ஜனதாவுக்கு ஆதாயம் கிடைக்கும். தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல். மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறது. சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
நாட்டின் ஒடுத்த மொத்த மக்களும் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான அவர்களது கோபத்தை மக்களவை தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படுத்த வேணடும்.இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

