
விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வியாபாரிகளை கண்டித்து 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோவிலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் திருக்கோவிலூர் & விழுப்புரம் நெடுஞ்சாலையை ஒட்டியவாறு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்களது விலை பொருட்களை விற்பனை செய்வதற்காக அதிக அளவில் குவிந்தனர். இதன் காரணமாக வியாபாரிகள், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காலை முதல் மாலை வரை விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வியாபாரிகளை கண்டித்து 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோவிலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலின் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அகண்டநல்லூர் போலீசார் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக விலை பட்டியலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் சாலை மறியல் கைவிடப்பட்டது. அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலின் காரணமாக பகுதி பெரும் பரபரப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

