
விஜய தசமியையொட்டி நாடு முழுவதுமுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் விஜயதசமி விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள சாமளேசுவரி கோவிலில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜிண்டால் ஸ்டீல் மேலாண் இயக்குநர் சஜன் ஜிண்டால் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் நடைபெற்ற ராம்லீலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி கலந்துகொண்டு பூசை செய்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற சாத்திரப் பூசையில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
திரிபுரா தலைநகர் அகர்த்தலாவில் முதன்முறையாக நடைபெற்ற இராவணத் தகன நிகழ்ச்சியில் முதலமைச்சர் மாணிக் சகா கலந்துகொண்டு சிறப்பித்தார். இராஜஸ்தானின் கோட்டாவில் தசராவிழாவையொட்டி உலகிலேயே மிகப்பெரிய கொடும்பாவி எரிப்பு நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவும், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவும் கலந்துகொண்டனர். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள ஐஸ்பாக் ராம்லீலை மைதானத்தில் இராவணத் தகன நிகழ்ச்சி நடைபெற்றது.
