Vaikuntha Ekadashi Festival: ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்!

Advertisements

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 23-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

மார்கழி மாதத்தில்  வரும் ஏகாதசியன்று வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 13-ம் தேதி திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் போது, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை – கொல்லம் விரைவு ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *