
அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போகாம யாரு போவா..! மாரி செல்வராஜை விமர்சித்தவர்களை வெளுத்துவாங்கிய வடிவேலு
மழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜை விமர்சித்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தக்க பதிலடி கொடுத்து பேசி உள்ளார்.
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் இயக்குனர் மாரி செல்வராஜும் உடன் சென்றிருந்தார். உதயநிதியுடன் மாரி செல்வராஜும் சென்றும் ஆய்வு நடத்தியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு மாரி செல்வராஜும் எக்ஸ் தளம் வாயிலாக தக்க பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜுக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடிவேலு பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “நம்முடைய அரசாங்கம் இன்னைக்கு எவ்வளவோ சோதனைகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. சென்னையில் புயல் வந்ததை பெரியளவில் அரசியலாக்கிவிட்டார்கள். ஆனால் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அரசியலாக்கமுடியல. அதனால் டைரக்டர் எதுக்கு அங்க போனான்னு கேக்குறாங்க.

அது அவன் ஊரு. அந்த ஊர்ல பள்ளம் எங்க இருக்கு, எந்தெந்த வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்கனு அவனுக்கு தான் தெரியும். அவன் போகாம வேற யாரு போவாங்க. அதுமட்டுமில்ல உதயநிதி எதுக்கு போனார்னு சிலர் கேட்குறான். அவர் அமைச்சர், அவர் போனதால் தான் அங்கு அடுத்தடுத்து வேலைகள் வேகமா நடந்துச்சு. அவரோடு ஏராளமான அதிகாரிகளும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால் தான் இதெல்லாம் நடந்திருக்கு.
மாரி செல்வராஜ் எதுக்கு வந்தானு கேட்குறாங்களே அவன் என்ன அமெரிக்கா காரனா. இப்படி தப்பு தப்பா பேசுறாங்க. மக்கள் படுகின்ற கஷ்டத்தை அரசு உணர்ந்ததால் தான் இவ்வளவு வேலைகளை செய்கிறார்கள். மழையால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது மிகப்பெரிய விஷயம். அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்” என வடிவேலு பேசி இருக்கிறார்.

