
அமெரிக்கா வன்முறையை தூண்டி விடுவதுடன், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது.
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்த சூழலில், ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.
போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவம் பாயும் என்றும் கூறினார். இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொது செயலாளருக்கு ஈரான் முறைப்படி கடிதம் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், அமெரிக்கா வன்முறையை தூண்டி விடுவதுடன், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறது என அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் பேச்சுகள் ஈரானில் போராட்டம் தீவிரமடைய வழிவகுத்து உள்ளது என்றும் அது ஈரானின் இறையாண்மை மற்றும் தேச பாதுகாப்புக்கு ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கடிதத்தில் தெரிவித்து உள்ளது.


