
இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை மகாராஷ்டிர ஆளுநர் முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
பிரிட்டன் பிரதமராகக் கெயிர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு அவர் முதன்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் பிரிட்டனைச் சேர்ந்த தொழில்துறையினரும் வணிகத்துறையினரும் வந்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமரை மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவ் விரத் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் சிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் பிரதமர் தங்கும் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது இருவரும் இரு நாடுகளிடையான விரிவான செயல்தந்திரக் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்துப் பேச்சு நடத்த உள்ளனர்.
மும்பையில் நாளை நடைபெறும் உலகளாவிய நிதித்தொழில்நுட்ப மாநாட்டிலும் இருவரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இந்தியா பிரிட்டன் இடையே 5600 கோடி கோடி டாலர் என்னும் அளவில் இப்போதுள்ள வணிகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
