
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் உயிரிழந்ததற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் கரூரில் கெடுவாய்ப்பாக நேர்ந்த நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேர்ந்த துயரம் சொல்லொண்ணா வேதனையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தம் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மீளாத் துயரில் இருக்கும் தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முருகன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் முருகன் தெரிவித்தார்.



