
தூத்துக்குடியில், கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி லாரியில் 48 பேரல்களில் கடத்திவரப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுமார் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல்செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களைக் குறி வைத்துக் கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல்துறையினர் மூன்றாவது மைல் பகுதி அருகே வாகன சோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்து வந்த இந்த லாரியில் உரிய ஆவணமின்றி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் 48 பேரல்களில் கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரியுடன் பயோ டீசலை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி டிரைவர் உள்பட இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


