
10 வருஷத்துக்கு பைக் ஓட்ட கூடாது என கூறி லைசென்ஸை ரத்து செய்தது கொஞ்சம் கூட நியாயமே இல்லை என சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பிரபலமான டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டில் புழல் சிறையில் இருந்த டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்குவதற்கு டிடிஎஃப் வாசன் முன்னுதாரணமாக இருப்பதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்ததுடன், இருசக்கர வாகனத்தை கொளுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையே, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக வட்டார போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் ஜாமீனில் இருந்து நேற்று டிடிஎஃப் வாசன் வெளிவந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இருசக்கர வாகனம் ஓட்டுவது தான் தனக்கு பிடிக்கும் என்றும், அதற்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது நியாயமே இல்லை என்ற டிடிஎஃப் வாசன், நான் வாழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆதங்கப்பட்டார். மேலும், சர்வதேச லைசென்ஸ் எடுத்து, பைக் ஓட்டுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு உண்மையில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், தன் மீது பழிசுமத்தும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து படத்தில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

