Tollywood: ஒரே நாளில் வெளிவரும் அக்காள், தங்கை படம்!  

ஒரே நாளில் வெளிவரும் அக்காள், தங்கை படம்!

ஐதராபாத்: இந்தி நடிகை கீர்த்தி சனோனின் தங்கை நுபுர் சனோன். பாடகியான இவர், ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், ரேணு தேசாய், முரளி சர்மா, ஹரீஷ் பெரேடி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தில் நடித்தது பற்றி நுபுர் சனோன் கூறியதாவது: ரவிதேஜாவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். நடிப்பு என்று வந்துவிட்டால் பரபரப்பாகி விடுவார்.

அக்‌ஷய்குமாருடன் ‘ஃபில்ஹால் 2’ என்ற இசை ஆல்பத்தில் நடித்தபோது, அடுத்து என்ன படம் பண்ணுகிறீர்கள்? என்று கேட்டார்.

இப்படம் பற்றி நான் சொன்னேன். யார் நடிக்கிறார் என்றார். ரவிதேஜா என்று சொன்னேன். ‘கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உங்களுக்குத் தெரியாது’ என்றார்.

அவர் சொன்னதை படப்பிடிப்பில் உணர்ந்தேன். முதல் பட நடிகை என்று பார்க்காமல் என்னை ரவிதேஜா நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

இந்தப் படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. என் சகோதரி கீர்த்தி சனோன் நடித்துள்ள ‘கணபத்’ இந்தி படமும் அதே நாளில் வெளியாகிறது. இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *