
இருக்கை விவகாரத்தைக் கண்டித்து அதிமுக கூச்சல் குழப்பம்!
சபாநாயகர் அப்பாவு விளக்கம்:
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்க உரிமை இல்லையெனச் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் நான் வீம்புக்காகச் செய்யவில்லை. சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன்; இது என் உரிமை. ஒரு சின்னத்தில் வெற்றி பெற்றவர் சின்னம் மாறிப் போனால் அதன்படி சட்டப்படி பதவியிலிருந்து நீக்கலாம். விதிப்படி, சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும் உரிமையைப் பறிக்காமலும் அவை நடைபெறுகிறது எனச் சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகர் நீண்ட விளக்கம் அளித்தபிறகும் பழனிசாமி தொடர்ந்து பேச முற்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இபிஎஸ் – ஓபிஎஸ் அணி அமளி:
சட்டப்பேரவையில் பழனிசாமி அணி – ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பேசிக்கொண்டிருந்தபோது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேச முற்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்:
தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள்மூலம் வெளியேற்றப்பட்டனர்.
அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வெளியே முழக்கம்:
சபாநாயகர் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வெளியே முழக்கம் எழுப்பினர். அரசியலில் எதிரும்புதிருமாக உள்ள இபிஎஸ், ஓபிஎஸ் பேரவையில் அருகருகே அமர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்து பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கம்:
யாருக்கும் சிறு மனக்குறை வரக் கூடாது என்றுதான் இந்த அவையை நடத்தி வருகிறோம். இடையூறு செய்ததாலேயே வெளியேற்ற உத்தரவிட்டேன்; இனி இவ்வாறு செய்தால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி பிரச்னையைத் தீர்க்கும் இடம் இது இல்லையெனச் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.


