
கார்த்திகை தீபம் என்றதும் நம்முடைய நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகா தீபம்தான். நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருவண்ணாமலை அற்புத திருக்கார்த்திகையன்று 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சியில் ஏற்றப்படுகிறது மகா தீபம். ஐந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில், 3 ஆயிரத்து 500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.
இதனைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள். திருவண்ணாமலையின் மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம் குறித்து எழுதப்பட்ட வரலாறு ஏதும் இல்லை என்றாலும், திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக்கதைகள் கூறுகின்றன. சிவபெருமான் ஜோதி வடிவில் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.
சிவபெருமான் அக்னி ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை என புராணக்கதைகள் சொல்கின்றன. ஆகையால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது கார்த்திகை தீபத் திருநாள். சைவ சமய நம்பிக்கைகளின்படி பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகக் கருதப்படுகிறது.
அண்ணாமலையார் கோயிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் கிபி 1031ஆம் ஆண்டுக் கல்வெட்டு, கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுந்தருளுவதைப் பற்றி கூறுகிறது. மகா தீபத்திற்கு முன்பாக, கார்த்திகை தீப திருநாளன்று அதிகாலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறார், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதுதான் இதன் தத்துவம். பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மகாதீபம் ஏற்படும். அதற்கு முன்னதாக, கோயில் மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை காண முடியும்.




