
திருப்பதி:
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் இறந்த செய்தியால் வேதனையடைந்தேன் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளைச் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு தொடங்குகிறது. வரும் 19 ஆம் தேதிவரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
இதையொட்டி இலவச தரிசன டோக்கன் வழங்க மொத்தம் 8 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் விஷ்ணு நிவாசம் பகுதியில் திருமலா ஸ்ரீவாரி வைகுண்ட துவாரா டிக்கெட் கவுண்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு டோக்கன் வாங்க பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் குவிந்தனர். வரிசையில் நிற்க முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் முயற்சியில் நெரிசல் அதிகமானது.
இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். கீழே விழுந்தவர்களில் 6 பேர் படுகாயமடைந்தும், மூச்சுத்திணறியும் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. இந்தச் சம்பவம்குறித்துப் பேசிய திருப்பதி தேவஸ்தானம் குழு உறுப்பினர் பானு பிரகாஷ், கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமானது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். சில குறைபாடுகள் உள்ளன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இழந்த உயிர்களை மீட்க முடியாது. எனத் தெரிவித்தார்.
திருப்பதி எம்.ஜி.எம்கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணம். இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகுறித்து கேட்டறிந்தார். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகளை அனுப்பி மீட்பு உதவிகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை இன்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தக் கோரச் சம்பவம்குறித்து வேதனை தெரிவித்துள்ளார். “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.
இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



