மங்களூரு நீச்சல் குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் மரணம்!

Advertisements

பெங்களூரு:

மங்களூருவில் உள்ள ஒரு ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் மூன்று மாணவிகள் மூழ்கி இறந்ததை அடுத்து, ரிசார்ட் உரிமையாளர் மற்றும் மேலாளரைப் போலீசார் கைது செய்தனர். ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்தது.

கர்நாடக மாநிலம் மங்களூருவின் உல்லல் கடற்கரைக்கு அருகில் உள்ள வாஸ்கோ ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் மூன்று பெண்கள் மூழ்கியதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் மற்றும் மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால்,“ மாணவிகள் மூழ்கிய நேரத்தில் நீச்சல் குளத்தில் பாதுகாப்பு பணியில் உயிர்காப்பாளர் இல்லை. மேலும், அங்கே எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது கடுமையான கவலைகளை எழுப்பியது. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 106 இன் கீழ் ரிசார்ட் உரிமையாளர் மனோகர் மற்றும் அதன் மேலாளர் பரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்டில், மைசூருவை சேர்ந்த கல்லூரி மாணவிகளான பார்வதி (வயது20), கீர்த்தனா (21), நிஷிதா (21) ஆகிய 3 பேர் தங்கினா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தனா். அந்தச் சமயத்தில் நீச்சல் குளத்திலிருந்து ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்றபோது, நிஷிதா நீரில் மூழ்கித் தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற பார்வதி நீரில் குதித்துள்ளார், இதனையடுத்து கீர்த்தனாவும் இவர்களைக் காப்பாற்ற நீரில் குதித்துள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் நீரில் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனா்

குளத்தில் உயிர்காப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பலகைகள் இல்லாததை வலியுறுத்தி, ரிசார்ட் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில், அதிகாரிகள் ரிசார்ட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் சோமேஸ்வரா டவுன் முனிசிபல் கவுன்சில் ரிசார்ட்டின் வர்த்தக உரிமத்தை ரத்து செய்தது. கூடுதலாக, சுற்றுலாத்துறை ரிசார்ட்டின் சுற்றுலா பதிவு சான்றிதழையும் ரத்து செய்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *