பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

Advertisements

டெல்லி:

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் பாஜக – காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதில் 2 பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்தது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றிப் பேசியதாகக் கூறப்படும் கருத்துச் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அமித்ஷாவை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதற்குப் போட்டியாகப் பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டது. . ராகுல் காந்தி தான் சந்திர சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், இதனால் தான் அவர் காயமடைந்ததாகவும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாகப் பாஜக சார்பில் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து 115 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 117 (வேண்டுமென்றே தாக்கிக் காயப்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிர் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது), 131 (குற்றவாளிகளைப் பயன்படுத்துதல்), 351 (குற்றம்சார்ந்த மிரட்டல்), 3(5) (குற்றம் செய்யும் நோக்கத்துடன் ஒன்றாகக் கூடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தான் இந்த வழக்கு விசாரணை என்பது டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி இந்த வழக்கைக் குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். முதற்கட்டமாகப் போலீசார் சம்பவ இடத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய நாடாளுமன்ற நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வாங்க உள்ளனர்.

அதன்பிறகு ராகுல் காந்தி மற்றும் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஏனென்றால் ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரைப் போலீசார் வாரண்டின்றி கைது செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சமாக 7 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும். இது நடக்கும் பட்சத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் கூடச் செய்யப்படலாம் என்பதால் இந்த வழக்கு அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் பாஜகவினர் தாக்கியதாகக் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *