
பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடர் அதனைச் செல்போனில் புகைப்படம் எடுத்தார்.
மும்பை:மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிராரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை தேடிவந்தார். அப்போது, ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைக் கண்டார். அதில், ஜோதிடர் வினோத் பண்டித்(வயது 55) என்பவர் எதிர்காலத்தைக் கணித்து தெரிவிப்பதாகக் கூறி இருந்தார். இதனை நம்பிய அப்பெண் அவரைத் தொடர்பு கொண்டார். நாளடைவில் ஜோதிடர் வினோத் பண்டித் பெண்ணை நம்ப வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் ஒரு வருடம் கழித்து அப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மீ்ண்டும் ஜோதிடரை அப்பெண் தொடர்பு கொண்டார். அப்போதும், அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் ஆபாச புகைப்படத்தைப் பதிவு செய்தார். பின்னர் ஆபாச புகைப்படத்தைக் காண்பித்து பெண்ணை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் இந்தச் சம்பவம்குறித்து நயாநகர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் வினோத் பண்டித்தை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரைத் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



