
பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பெற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நஞ்சு குடித்து ஆசிரியர் கண்ணன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.



