விஜய் பக்கம் சாயும் கிருஷ்ணசாமி : தவெக – புதிய தமிழகம் கூட்டணி அமையுமா?

Advertisements

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் வாக்கு வங்கியை வைத்திருக்கும் புதிய தமிழகம், விஜய்யின் தவெக கூட்டணி பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உரிமைகளைப் பேசும் கட்சிகளில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் முதன்மையானதாக உள்ளது. 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பயணித்து வருகிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஓட்டபிடாரம், நிலக்கோட்டை தொகுதிகளில் புதிய தமிழகம் வென்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி ஓபிசி பிரிவில் இணைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.

பிரதமர் மோடியே பட்டியல் வெளியேற்றம் பற்றி உறுதியளித்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்று தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பட்டியலின வெளியேற்றம் குறித்த எந்த முடிவையும் பாஜக அறிவிக்காததால் அதிருப்தி அடைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தேவேந்திர குல வேளாளர் வாங்கி வங்கியை கணிசமாக வைத்துள்ளது புதிய தமிழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் சமீபத்திய நகர்வுகள் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தே அமைந்துள்ளன. குறிப்பாக ஆளும் திமுக அரசு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை கண்டு கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

2 கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டினார். வாக்குகளை அள்ளிக் கொடுக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் திராவிடக் கட்சிகளால் முக்கியமான காலங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்பதை புரிந்து கொள்வார்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புகள் இல்லை, அதே சமயம் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் விஜய்யின் அரசியல் கருத்துகளை கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *