
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரத்தில் சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டின் கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார்.
சத்திய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி நாளை முற்பகல் பத்து மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்திய சாய்பாபா சமாதிக்குச் செல்கிறார்.
அதன்பின் சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுச் சிறப்பு நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிடுகிறார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின் அங்கிருந்து கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
கோவையில் பகல் ஒன்றரை மணிக்குத் தென்னிந்திய அளவிலான இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடக்கி வைக்கிறார். அந்த நிகழ்ச்சியிலேயே நாடு முழுவதுமுள்ள 9 கோடி உழவர்களுக்கு ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்கிற கணக்கில் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கிறார்.
கோவையில் நவம்பர் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள், அறிவியலாளர்கள், விற்பனையாளர்கள் என ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.




