
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான, சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய இரண்டு படங்களின், முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. இவர் வீட்டுல விசேஷம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சத்யராஜ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தினை, ரெட் சிங் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் நேற்றைய தினம் வெளியான நிலையில், முதல் நாளில் 1 கோடி வசூலை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லால், ஜான் விஜய், கிஷன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ், அரவிந்த்சாமி, ஜீவா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, ப்ளூ ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் குறித்து பேசப்பட்டுள்ள இந்த படம், மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகியுள்ளது.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு லீட் ரோலில் நடித்துள்ள நிலையில், பிரீத்தி, பக்ஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசோக் செல்வனுக்கு ஜோடியாக, அவரின் மனைவி நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், முதல் நாளில் 60 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் வசூலை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், எந்த படத்தின் வசூல் பிகாப் ஆகும், என்ஹா படத்தின் வசூல் டிராப் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



