Rahul Gandhi:ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி மவுனம் ஏன்?

Advertisements

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறாரென ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களாக நடந்த வெவ்வேறு பயங்கரவாத சம்பவங்கள்குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் எனக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய அந்தப் பயங்கரவாதிகள் பாஜக ஆட்சியில் ஏன் பிடிபடவில்லை என்பது குறித்து நாட்டுக்கு விளக்கம் தேவை எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை விமர்சிக்கும் வகையில், “நரேந்திர மோடி வாழ்த்துச் செய்திகளுக்குப் பதிலளிப்பதில் மும்முரமாக இருக்கிறார், ஜம்மு காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட யாத்திரீகர்கள் குடும்பத்தினரின் அழுகையைக் கூடக் கேட்க அவருக்கு நேரமில்லை” என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கடந்த 3 நாட்களில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, கதுவா மற்றும் தோடா ஆகிய 3 வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் பிரதமர் மோடி இன்னும் கொண்டாட்டத்திலேயே மும்முரமாக இருக்கிறார்.” எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் பாஜக ஆட்சியில் ஏன் பிடிபடவில்லை என்பது குறித்து நாட்டுக்கு விளக்கம் தேவை எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் தாலுகாவின் சேடா சோஹல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கையெறி குண்டுகளை வீசித் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அம்மாநிலம், தோடாவில் உள்ள சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல், ஜம்மு காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டினால், நிலை தடுமாறிய ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *