Puducherry Child Murder: புத்தகங்கள், பொம்மைகளுடன் சிறுமியின் உடல் நல் அடக்கம்!

Advertisements

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றதை அடுத்து சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதில், ஒரே சிசிடிவி பதிவில் மட்டுமே சிறுமி நடந்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது.

பின்னர் போலீசார் வீடு வீடுடாகச் சோதனையில் நடத்தினர். இந்நிலையில், மூன்று நாட்கள் கழித்து அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களைக் கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாகக் கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

சிறுமியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களைச் சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலைத் தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. சிறுமியின் வீட்டிலிருந்து பாப்பம்மாள் கோவில் சுடுகாடு வரை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இறுதி ஊர்வல வாகனத்தில் சிறுமியின் உடலுக்கு அருகே புத்தகங்கள், விளையாட்டுப் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடலுக்கு வழிநெடுகிலும் நின்று மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதையடுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றதை அடுத்து சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *