Rahul Gandhi: ஊழலைக் கற்றுத்தரும் பள்ளியை நடத்துபவர் பிரதமர் மோடி!

Advertisements

புதுடெல்லி: “ஊழலைக் கற்றுத்தரும் பள்ளியைப் பிரதமர் மோடி நடத்துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோகிப்பது எப்படி என்பது பற்றிப் பிரதமர் பாடம் நடத்துகிறார்” என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு ‘முழு அறிவியல் ஊழல்’ (Entire Corruption Science) என்ற பாடத்தின் கீழ், ‘நன்கொடை வியபாரம்’ (donation business) உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரே விரிவாகக் கற்பிக்கிறார். இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும், இந்த ஊழல் பள்ளியைப் பூட்டி, இந்தப் பாடத்தை ஒழித்துக் கட்டும்.

ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது? என்பது குறித்து அவரே பாடம் நடத்துகிறார்” என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் ‘எக்ஸ்’ தளத்தில், “மாற்றத்தைத் தேர்வு செய்யுங்கள். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில், ராகுல் காந்தியை பிரதமர் மோடி ‘ஊழலில் சாம்பியன்’ என்று விமர்சித்திருந்த நிலையில், ராகுல் காந்தி தற்போது எதிர்வினையாற்றியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ராகுல் காந்தி, “உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து, அதைச் சட்டவிரோதமானது என்று அறிவித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். அப்போது அவரின் கைகள் நடுங்கின” என விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *