
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்குப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் தொடங்கிய 1857ஆம் ஆண்டுக்கு, 100 ஆண்டுகள் முன்பாகவே, ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சண்டையிட்டு ஆங்கிலேயப் படைகளை விரட்டி அடித்த மாவீரன்தான் அழகுமுத்துக் கோன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டாலங்குளத்தில் பிறந்த அழகுமுத்துக் கோன் தனது 22ஆவது வயதிலேயே, கட்டாலங்குளச் சீமையின் மன்னரானதையும் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர்கள், நம்மிடமே வரி வசூலித்ததை மாவீரன் அழகுமுத்துக்கோன் விரும்பவில்லை என்றும், இதனால், திருநெல்வேலிப் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த முடியாது என்று கடிதம் அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு எதிராக விடுதலைத் தீயை முதன் முதலாகப் பற்ற வைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவைப் போற்றுவோம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.



