Parliament committee:வக்பு வாரிய மசோதா: பார்லி., குழு கூட்டத்தில் கடும் மோதல்!

Advertisements

புதுடில்லி: வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்களிடையே கடும் வார்த்தை போர் மற்றும் அரசியல் ரீதியிலான மோதல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, லோக்சபாவில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியதால், உடனடியாக இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ., மூத்த எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவானது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்களுடன் மசோதா குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தது. மேலும் 95,00,000 இமெயில்கள் வந்துள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த இக்குழுவின் கூட்டத்தில் பெரும் புயல் கிளப்பியது. உறுப்பினர்களிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டதுடன், அரசியல் ரீதியிலும் மோதிக் கொண்டனர்.

குறிப்பாக, வாரியத்தில் கலெக்டர்களின் பங்கு, முஸ்லிம் அல்லாதவர் இடம்பெறுதல், வக்பு வாரிய சொத்துகள் தொடர்பாக இடம்பெற்றுள்ள அம்சம்குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வக்பு சொத்துகளின் குறித்து யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கலாமென இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளது ஆட்சேபனைக்கு உரியது எனத் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய கூட்டங்களிலும் இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பா.ஜ., எம்.பி., மேதா குல்கர்ணி பேசும்போது, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குறுக்கீடு செய்துள்ளனர். இதனால், கோபமடைந்த அவர், தன்னை எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாகவும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோபத்துடன் கூறியதால், பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், ஜெகதாம்பிகா பால் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *