Panguni Uthiram 2024: வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாகக் கோலாகலமாக நடைபெற்றது. இரவு நடைபெற்ற வள்ளி திருக்கல்யாணத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாகக் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6.00 மணிக்குக் கோவிலிலிருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளிப் புறப்பாடு நடைபெற்றது.

மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனையும், மாலை 5.00 மணிக்குக் கோயிலிலிருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிச் சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார் அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்குச் சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர் முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *