Cricket World Cup: பாகிஸ்தான் அணி வெற்றி!

Advertisements

பாகிஸ்தான் அணி வெற்றி!

கொல்கத்தா: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகள் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் வங்காளதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடக்க ஆட்டக்காரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் ஹுசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்புகூர் ரஹீம் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதனை தொடர்ந்து லிட்டன் தாஸ்- மகமதுல்லா ஜோடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு சரிவில் இருந்து மீட்டது. லிட்டன் தாஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மகமதுல்லா அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்களும், மெஹதி ஹசன் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா- பகார் ஜமான் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அப்துல்லா 68 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பகார் ஜமான், 81 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் ரிஸ்வான் (26), மற்றும் இப்திகார் (17) இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 7-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

மீதமிருக்கும் இரு (நியூசிலாந்து, இங்கிலாந்து) போட்டிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்புள்ளது. இதனால் அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் அணி நீடித்து வருகிறது.இந்த சூழலில் இதுவரை 6 தோல்வியை சந்தித்துள்ள வங்காளதேச அணி, உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *